2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே 150 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்திய நாடு என்ற மைல்கல்லை இந்தியா எட்டியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2ஆவது வளாகத்தை பிரதமர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதில் பேசிய பிரதமர், 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி, புதிய வரலாற்று மைல்கல்லை இந்தியா எட்டியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த சாதனைக்காக விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், தமது சகாக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மோடி கூறினார்.
18 வயதை கடந்தவர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்றும் அவர் அவர் குறிப்பிட்டார். புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவச் செலவைக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.