5 மாநில தேர்தல் தேதிகள், கட்டுப்பாடுகள் - தேர்தல் ஆணையர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்!

2 years ago 482

Election-commission-announced-dates-for-5-states-election

இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை தேலைமை தேர்தல ஆணையர் சுஷில் சந்திரா டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல நடைபெறுகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 20ல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 23-ம் தேதி 4-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ல் 5-ம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 3-ம் தேதி 6-ம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 7 அன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இதில் மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மற்ற 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

image

5 மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக, 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரப்புரை

வேட்பாளர்கள் இயன்ற வரை டிஜிட்டல் முறையில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நடைப்பயணம், சைக்கிள் பேரணி ஆகியவற்றுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15-ம் தேதி வரை அரசியல் கட்சியினர் நேரடிப் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால், வாக்களிக்கும் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 90% பேருக்கு முதல் தவணையும், 52% பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 82% பேருக்கு முதல் தவணையும், 56% பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பணியாளர்கள் அனைவரும், முன்களப் பணியாளர்களாக கருத்தில் கொள்ளப்பட்டு கூடுதல் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இ-விஜில் என்ற செயலியில், பொதுமக்கள், தேர்தல் தொடர்பாக புகார்களை அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையக் குழு டிசம்பர் இறுதியில் இருந்து 5 மாநிலங்களில் ஆய்வு செய்ததாக தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். மேலும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு கள ஆய்வு அடிப்டையில் தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

image

5 மாநிலத்தில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 2.16 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளன. 24.9 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர். இதில் பெண்கள் 11.4 லட்சம் பேர் வாக்களார்களாக உள்ளனர்.

80 வயது முதியவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்து. ஆன்லைனிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும் என்றும் தலைமை தேர்தல ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட எதன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்க தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article