அர்ஜென்டினா நாட்டின் Trelew நகரில் அமைந்துள்ள சிறைச்சாலைக்குள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிக்கு பெண் நீதிபதி ஒருவர் முத்தம் கொடுப்பது மாதிரியான வீடியோ காட்சிகள் பொது வெளியில் கசிந்துள்ளன. சிறைச்சாலைக்குள் இருந்த சிசிடிவி-யில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளது மரியல் சுரேஸ் (Mariel Suarez) என்ற பெண் நீதிபதி. சுபுட் மாகாணத்தில் அவர் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த மாகாணத்தில் தான் Trelew நகர சிறைச்சாலையும் அமைந்துள்ளது.
புஸ்டோஸ் என்ற குற்றவாளிக்கு அவர் முத்தம் கொடுப்பது இந்த வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது. கடந்த 2009-இல் அதிகாரி ஒருவர் கொலை செய்த குற்றத்திற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. அந்த நீதிபதிகள் அமர்வில் மரியல் சுரேஸும் ஒருவர். அதோடு இரண்டு நீதிபதிகள் ஆயுள் தண்டனை என தீர்ப்பு கொடுக்க மரியல் அந்த தண்டனை வேண்டாம் என சொல்லியுள்ளார்.
‘சிறைச்சாலைக்குள் அப்படி எதுவும் நடக்கவில்லை’ என மறுத்துள்ளார் மரியல். “நான் அந்த வழக்கு குறித்து புத்தகம் எழுதும் நோக்கில் அவரை சந்திக்க சென்றிருந்தேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை. எனக்கும் அந்த குற்றவாளிக்கும் இடையே உறவு ஏதும் இல்லை. நான் அவருக்கு முத்தமும் கொடுக்கவில்லை. அவர் சொல்வது யாருக்கும் கேட்காமல் இருக்கும் வகையில் இருவரும் நெருங்கி அமர்ந்திருந்தோம்” என சொல்லியுள்ளார் மரியல்.
இது தொடர்பாக சுபுட் மாகாண தலைமை நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த டிசம்பர் 29 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.