திண்டுக்கல்- -ஐயப்ப பக்தர்கள் சீசன் நெருங்கி வருவதால் மாவட்ட எல்லைப்பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுக்காக, கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நாளை மறுநாள் ஐப்பசி துவங்குகிறது. கேரளா ஐய்யப்பன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் இருந்து ஏராளமான மக்கள் படையெடுப்பர். அங்கு செல்வோரில் பெரும்பாலோர் பழநி கோயிலுக்கு செல்லாமல் சொந்த ஊர் திரும்புவதில்லை.அதைத் தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம் அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்கு பழநிக்கு தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும்.
முதலில் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் பழநி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வெளியூர் வியாபாரிகள் முகாமிடுவது வழக்கம்.அதேபோல கார்த்திகை மாதம் நெருங்கும் நேரத்தில் வடமாநில மற்றும் இதர மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான வியாபாரிகள் முகாமிடுவர். கொரோனா 3ம் அலை எச்சரிக்கை விடப்படிருக்கிறது. இந்த நேரத்தில் கேரள பக்தர்களின் வருகைக்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டியதுஅவசியம்.
வத்தலகுண்டு, செம்பட்டி, பழநி சாமிநாதபுரம், திருச்சி ரோடு தங்கமாபட்டி, வேடசந்தூர் என எல்லைப்பகுதிகளில் போலீசாரும் ரோந்து பணிகளை தீவிரபடுத்த வேண்டும். அதேபோல் பழநிக்கு வருவோர் கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். கேரளா போல் பழநிக்கு வருவோரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வலியுறுத்தலாம்
.பழநி, கொடைக்கானல் பகுதியில் 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக வருவோர் வாயிலாக கொரோனா பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனம் தேவை. எனவே, மாவட்ட நிர்வாகம், போலீசார் என அதற்கான பணிகளை இப்போதே தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.
Advertisement