ஆந்திரா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி
16 அக், 2021 - 13:43 IST
கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதன்படி தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கு தளர்த்துவதன் ஒரு பகுதியாக தற்போது 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நவம்பர் முதல் தேதியிலிருந்து அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஏற்கெனவே தெலுங்கானா மாநிலத்தில் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கி வருகிறது. தற்போது ஆந்திராவிலும் நேற்று முதல் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படுவதால் தெலுங்கு திரையுலகினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
Advertisement