ஆபீசுக்கு போய் சேர்வதற்குள்... 'சாயங்காலம்' ஆகி விடுகிறது! பாலம் பணி எப்பதான் முடியும்?

2 years ago 577

கோவை:கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மழை நீர் வடிகால் கட்டுவதற்காக ஒரு வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மற்றொரு வழியில் அனைத்து வாகனங்களும் செல்வதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ரோடும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கோவை- - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் ராமன கவுண்டர் பூவாத்தாள் திருமண மண்டபம் வரை, ஒரு கி.மீ., துாரத்துக்கு ரூ.54 கோடியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டுகிறது. 2020ல் துவங்கப்பட்ட இப்பணி, கொரோனா பரவல் காரணமாக தொய்வாகி, தற்சமயம் மெல்ல மெல்ல நடந்து வருகிறது.

ஓடுதளம் அமைக்கும் பணி முடிந்து, பாலத்தின் ஏறுதளம், இறங்கு தளம் பகுதியில் தார் சாலை போடப்படுகிறது. கவுண்டம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் வழித்தடத்தில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. அதனால், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று வழித்தடத்தில் செல்ல அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டுப்பாளையம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சாயிபாபா கோவில் - தடாகம் ரோடு - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி.புதுார் - கணுவாய் - அப்பநாயக்கன்பாளையம் - துடியலுார் அல்லது கே.என்.ஜி.புதுார் - ஜி.என்., மில்ஸ் ஆகிய வழித்தடங்களில் செல்ல வேண்டும்.சுற்றுப்பாதை என்பதால், பாலம் கட்டும் வழித்தடத்திலேயே போக்குவரத்து நெரிசலுக்கு இடையே பயணிக்கின்றனர். துடியலுாரில் இருந்து கோவை நோக்கி வரும் வழித்தடத்தையே, இரு வழியாக வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.
இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி ஆட்டோ, கார், வேன், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும், எதிரே எதிரே செல்வதாலும் குறுக்கு வீதிகளில் இருந்து வருவதாலும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எறும்புபோல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.இரு சக்கர வாகன ஓட்டிகள், புதிதாக கட்டிய மழை நீர் வடிகால் மீது செல்கின்றனர். பாலத்தின் கடைசி பகுதியில் கீழிறங்க முடியாமல் தடுமாறுகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால், வாய்ப்புள்ள இடங்களுக்குள் வாகன ஓட்டிகள் நுழைந்து செல்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மழை நீர் வடிகால் கட்டுதல், தார் சாலை போடும் பணி நடக்கிறது. பின், மின் விளக்கு பொருத்தப்படும். 'சர்வீஸ்' ரோட்டில் வடிகால் வேலை முடிந்ததும், தார் சாலை போடப்படும். பிப்., இறுதிக்குள் பணியை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என்றனர்.
பணியை முடிக்கும் வரை, பொதுமக்கள் அனுபவிக்கும் மன உளைச்சலுக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசாரை அதிகளவில் நியமித்து, வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

Advertisement

Read Entire Article