பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் உள்ள காலூகன் நகரில் வசிக்கும் ப்ரெண்டா டெல்கடோ என்ற ஓவிய கலைஞர், இறந்த கரப்பான் பூச்சிகளின் மீது அழகான ஓவியங்களை வரைவது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இறந்த பூச்சிகளைப் பார்த்து பலர் நடுங்குவார்கள், ஆனால், "உங்கள் திறமைகளை கண்டுபிடிக்க பயப்படாதீர்கள், சாத்தியமற்றது என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களைச் செய்ய உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள்" என்று டெல்கடோ கூறுகிறார்.
மணிலாவில் உள்ள காலூகன் நகரில் வசிக்கும் 30 வயதான இவர், தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து இறந்த கரப்பான் பூச்சிகளை துடைத்தபோது இந்த வினோதமான யோசனையை முயற்சி செய்தார். கரப்பான் பூச்சியின் சிறகுகள் எவ்வளவு பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கின்றன என்பதை கவனித்த அந்த பெண், இறந்த கரப்பான் பூச்சிகளை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து ஓவியம் வரைய தொடங்கினார்.
பூச்சிகளில் ஓவியம் வரைந்த முதல் நபர் டெல்கடோ அல்ல. மெக்சிகன் கலைஞர் கிறிஸ்டியன் ராமோஸ் கரப்பான் பூச்சிகள் மீது எதிர்ப்பு ஓவியங்களை வரைகிறார். இறந்த பூச்சிகளின் மீது உலகப் புகழ்பெற்ற வின்சென்ட் வான் கோவின் ‘ஸ்டாரி நைட்’ உள்ளிட்ட அழகான காட்சிகளை வரைவதற்கு டெல்கடோ ஆயில் பெயிண்ட் பயன்படுத்துகிறார். அவரது படைப்புகள் ஆன்லைனில் அதிக ஈர்ப்பைப் பெற்றுள்ளன.