உத்தமபாளையம்--கனமழையால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வருவாய் துறையினர் தண்டாடோரா மூலம் எச்சரித்துள்ளனர்.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. ஆரம்பத்தில் லேசாக துவங்கிய மழை காலை 11:00 மணியிலிருந்து இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதனால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர மேகமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளில் சேகரமாகும் தண்ணீரும் துாவானம் வழியாக சுருளி அருவிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
சுருளி அருவியிலிருந்து வெளியேறும் தண்ணீர், காட்டுவாரி தண்ணீர் சேர்ந்து முல்லைப் பெரியாற்றில் 2 ஆயிரம் கனஅடி வரை செல்கிறது. இதனால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அரசு துறையினர் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன் கூறுகையில், முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி போன்ற கிராமங்களில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று தண்டோரா போடப்பட்டுள்ளது. பாதிப்புகள் ஏற்பட்டால் எதிர்கொள்ள அதிகாரிகள் தயார்நிலையில் உள்ளனர்' என்றார்.மகிழ்ச்சிபோடி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, போடிமெட்டு, குரங்கணி, கொட்டகுடி பகுதிகளில் நேற்று காலையில் துவங்கிய மழை மாலை 4 மணிக்கு மேலும் தொடர்ந்ததால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து வர துவங்கியது. மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement