"ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" - தைவான் இணைப்பில் உறுதியாக இருக்கும் ஜின்பிங்!

3 years ago 759

Xi-Jinping-says-reunification-must-be-fulfilled-with-Taiwan

சீனா - தைவான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தைவான் இணைப்பு நிலைப்பாடு குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விரிவாகவும் உறுதியாகவும் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

1940-ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டுப் போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனிநாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால், தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அதனை பிரிக்கப்பட்டு வரும் மாகாணமாக கருதி வருகிறது. மேலும், சில தினங்களாக அதிரடியாக செயல்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாள்களில் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சுமார் 150 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. அதிலும் முதல்நாள் மட்டும் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்பட 38 விமானங்கள் தைவான் வான் பரப்பில் அத்துமீறி பறந்தன. இதனையடுத்து சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட, தைவான் தரப்பில் அச்சம் வெளியாகி இருந்தது.

தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் இதுதொடர்பாக பேசுகையில்,“ கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு சீன உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 2025-க்குள் தைவான் மீது சீனா முழுமையாக படையெடுக்கும்" என்ற அச்சம் தெரிவித்திருந்தார். இதன்பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலையிட்டு பிரச்னைக்கு தற்காலிக முடிவைத் தேடினார்.

image

ஜோ பைடனிடம் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், “தைவான் உடன்படிக்கைக்கு கட்டுப்படுவோம்" என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இன்று பேசியுள்ள ஜின்பிங், இதற்கு மாறாக பேசியுள்ளார். 1911 சீனப் புரட்சியின் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஜின்பிங், “சீன மக்களின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வலுவான திறனை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

ஹாங்காங்கில் உள்ளதைப் போன்று ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்' என்ற கொள்கையின் கீழ் தைவான் ஒருங்கிணைப்பு ஏற்படுவதை பார்க்க விரும்புகிறேன். தைவானை மீண்டும் இணைப்பது நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், சீனா அதை அமைதியான முறையில் செய்ய விரும்புகிறது. அமைதியை அமைதியாக அடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், தைவானின் சுதந்திர பிரிவினைவாதம் அந்த மாகாணத்தை தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைக்க மிகப்பெரிய தடையாக உள்ளது. என்றாலும், தடைகளை மீறி சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும்" என்று பேசியிருக்கிறார்.

| தொடர்புடைய செய்திக் கட்டுரை: வான்வழி அத்துமீறலில் சீனா... 'தயாராகும்' தைவான்... - தொடரும் பதற்றமும் பின்னணியும் |

Read Entire Article