கம்பம்-ஒரே வீட்டில் 20க்கும் மேற்பட்ட நாய், பூனைகளை குழந்தைகள் போல் கம்பம் தம்பதி மாரியப்பன்-அமுதா வளர்க்கின்றனர்.
டி.எஸ்.கே.நகரில் வசிக்கும் இவர்களின் வீட்டில் 10 நாட்டு நாய்கள், 10க்கும் மேற்பட்ட பூனைகள் வளர்க்கின்றனர். நாய்களும், பூனைகளும் ஒன்றொடன்று நட்பாக உலா வருகின்றன. பூனைகளுக்கு முருகன், மீனாட்சி, சொக்கநாதன் என்றும், நாய்களுக்கு ராமு, பைரவி, மூர்த்தி என்ற பெயருடனும் அழைக்கின்றனர். பெயர் சொல்லி அழைத்ததும் அருகில் வந்து சாப்பிட்டு வியக்க வைக்கின்றன.
இதுபற்றி அமுதா கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் பூனை ஒன்று எங்கள் வீட்டில் குட்டி ஈன்றது. அதைபார்த்த போது ஒரு தாய் பிரசவமாகி குழந்தைகளுடன் இருப்பது போல உணர்வு. பூனைக்கு பால் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தேன். பக்கத்து வீதி, வீடுகள் பூனைகள் குட்டி ஈன்றார் எங்களிடம் கொடுப்பார்கள். இதேபோல் நாய்களையும் வளர்க்க துவங்கினோம். நாய்களும், பூனைகளும் வீட்டில் பெருகியது. பூனைகள் பகலில் வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும் இரவு வீட்டிற்கு வந்துவிடும்.
நாய்களுக்கு பால்சோறு, ரொட்டி, பூனைகளுக்கு கருவாடு, பால்சோறு தருகிறோம். இரவில் எங்களுடன்தான் துாங்கும். ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தாலும் இப்போது எங்கள் குழந்தைகளாக பார்க்கின்றோம்.சமீபத்தில் கருப்பன் என்ற பூனை இறந்தது. உரிய சடங்குகள் செய்து அடக்கம் செய்தோம்'செல்ல பிராணிகள் நன்றியையும், அன்பும் செலுத்த கூடியது என்றார். இவர்களை பாராட்ட 95008 83191.
Advertisement