கடலூரில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகளை நேரில் பார்த்து நலம் விசாரித்துள்ளார் அவர்.
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சி பகுதிக்குட்ப்பட்ட கம்பளிமேடு கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று 17 குழந்தைகளையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த குழந்தைகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க... அங்கன்வாடி மையங்களில் செப்.1 முதல் குழந்தைகளுக்கு சூடான சத்துணவு - தமிழக அரசு உத்தரவு
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பில் அலட்சியம் இருந்திருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைகளுக்கு இதுவரை எந்த விதமான பெரிய பாதிப்புக்களும் இல்லை. அனைத்து குழந்தைகளும் நல்ல நிலையில் இருக்கின்றனர். இனிவரும் காலங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உணவு தயாரிப்பில் ஈடுபடுவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.