தானே காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் என சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சோனியா காந்தி, “நான் கட்சியின் முழு நேர தலைவர் பொறுப்பில் இருக்கிறேன். நிர்வாகிகள் கேட்டுக்கொண்டால் அதில் நீடிக்கப் போகிறேன். காங்கிரஸில் உள்ள அனைவருமே கட்சிக்கு புத்துணர்வு தரவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்குமுன் அனைவரும் ஒற்றுமையாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் இருப்பது அவசியம். கட்சி தலைமை குறித்த கருத்துகளை ஊடகங்கள் மூலம் எனக்கு தெரிவிக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் நேர்மையான வெளிப்படையான விவாதத்திற்கு கட்சி தயாராக இருக்கிறது. கொரோனா காரணமாகத்தான் உட்கட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது. அத்தேர்தலை நடத்துவது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்றார்.
காங்கிரசுக்கு துடிப்பான முழு நேர தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லாத நிலையில் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கேள்வி எழுப்பியிருந்தார். கட்சிக்குள் எழுந்த சலசலப்புகளுக்கு பதில்தரும் விதமாக சோனியா காந்தியின் இன்றைய உரை அமைந்துள்ளது. இதற்கிடையே வரும் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.