செங்குன்றம் : தை பருவத்திற்கான விவசாய பணிகள், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் துவங்கி உள்ளதால், விவசாயிகள், அதை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், அடுத்தாண்டு தை பருவத்திற்கான விவசாய பணிகள், சில நாட்களாக வேகமெடுத்துள்ளன. பருவ மழை எதிரொலியாக, மாவட்டத்தில் பரவலான மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதனால், விவசாயிகள் நெற்பயிருக்கான விவசாயத்தை பரவலாக துவங்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட பகுதி களில் மட்டும், 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடந்து வருகிறது. அதில், பி.பி.டி., எனப்படும் பாபட்லா பொன்னி- 13, பி.பி.டி., -12, பொன்மணி உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. அதற்கான நாற்று நடவு, களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரம் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. இதனால், கிராமத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான வேலை வாய்ப்பு கிடைத்துஉள்ளது.
இப்போது, நடவு செய்யப்படும் பயிர்கள், அடுத்தாண்டு தை திருநாளில் அறுவடை செய்யப்படும். சோழவரம் சுற்று வட்டாரங்களில் நாற்று நடவு பணிகளுக்காக, 1 ஏக்கருக்கு 16 பெண்கள், 6 ஆண்கள் என 22 பேர் பணியாற்றுகின்றனர். காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 வரை பணி தொடர்கிறது. நாற்று பறித்து, இடம் மாற்றி நடும் பணிக்காக 1 ஏக்கருக்கு, 4,250 ரூபாயும், களை அகற்றுதலுக்கு 1 நபருக்கு, 180 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
வேகமெடுத்துள்ள விவசாய பணிகளால், உற்சாகமான வேலைவாய்ப்பும், திரும்பிய திசையெல்லாம் பசுமையும், குளிர்ச்சியும் கரை புரண்டு ஓடுகிறது.இழப்பீடுக்கு கோரிக்கை!சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, நத்தம் சுற்றுவட்டாரங்களில், அரசு நிறுவனத்தின் எரிபொருள் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
அதனால், விவசாயநிலத்திற்கான குழாய்கள் சேதமடைந்து, தண்ணீர் வசதி கிடைக்காமல், 100 ஏக்கர் அளவிற்கு விவசாயம் பாதிக்கப்பட்டுஉள்ளது. இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளோம். எங்களுக்கு, பாதிப்பிற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
Advertisement