தமிழ்நாட்டில் தினசரி சராசரியாக 100 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. தீவிர பாதிப்பு இல்லை என்றாலும் குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகமாகவே இருப்பதற்கு காரணம் என்ன? இதை தடுப்பது எப்படி?.
தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் முதல் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது. இதுவரை 99,944 குழந்தைகள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தினசரி கொரோனா தொற்று உறுதியாவோரில், 100 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருப்பதாக தமிழக மருத்துவத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அதாவது தினமும் தொற்று உறுதியாவோரில் 6 சதவீதம் பேர் குழந்தைகளாக இருக்கின்றனர். அதிலும் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதும் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஒன்று முதல் 8 வரையிலான வகுப்புகளைத் திறக்க இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை சொல்லித் தருவதும் அவசியம் என்கிறார்கள் குழந்தை நல நிபுணர்கள். பெற்றோரும், குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரும் இருதவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.