சபரிமலை ஐயப்பன் கோவில்: மண்டல மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

3 years ago 737

Sabarimala-Iyappan-Temple-Online-booking-launch-for-Mandala-Makaravilakku-Puja

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான 'ஆன்லைன்' முனபதிவு துவங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும்

image

தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

தற்போது இந்த 61 நாள் தரிசனத்திற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்திற்குள்ளேயே 2022ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியான புத்தாண்டிற்கும், 2022 ஜனவரி 14ம் தேதி நடக்கும் மகரஜோதி தரிசத்திற்குமான முன்பதிவு முற்றிலும் நிறைவடைந்துள்ளது

பக்தர்கள் வழக்கம்போல சபரிமலையின் 'sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர். பரிசோதனையின் கொரோனா 'நெகட்டிவ்' சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

image

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலங்களில் 500 முதல் 1,000 பக்தர்களே தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலங்களில் பம்பையில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் சன்னிதானம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தங்கி செல்ல அனுமதி இல்லை. ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும். அபிஷேகம் செய்த நெய் அனைத்து பக்தர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

image

கடந்த ஆண்டைப்போல், சபரிபமலை சன்னிதானம் செல்ல எருமேலி வனப்பாதை புல்லுமேடு வனப்பாதைகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இதற்கிடையில் மலையாள மாத துலாம் மாத மாதாந்திர பூஜைக்காக வரும் அக்டோபர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கம்போல் நடக்கும் மாதாந்திர பூஜைக்காலங்களில் கடந்த மாதத்தைப்போல் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் . அதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.

Read Entire Article