சபரிமலையில் ஜன., 14ல் மகர சங்கராந்தி பூஜை: ஏற்பாடுகள் தீவிரம்

2 years ago 819

சபரிமலை--சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

latest tamil news

டிசம்பர் 31-ம் தேதி துவங்கிய மகர ஜோதி சீசனில், சபரிமலைக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த சீசனில் எட்டு நாட்களில், 14.65 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 25.28 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல்லில், தேவசம்போர்டும், அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து, மகரஜோதி தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பாண்டி தாவளம், மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில், பக்தர்கள் அமர்ந்து ஜோதி தரிசனம் செய்வதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாண்டி தளத்தில் மட்டும் 8,000 பேர் தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மகரஜோதி அன்று மட்டும், ஒன்றரை லட்சம் பக்தர்கள் சன்னிதானத்தில் இருப்பர் என்ற கணக்கின் அடிப்படையில், போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில், சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். இந்த ஆண்டு ஜன., 14 மதியம் 2:29 மணிக்கு இந்த பூஜை நடக்கிறது. அந்த நேரத்தில், திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு, நேரடியாக அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

latest tamil news

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் கூறியதாவது: ஜன., 14 அன்று மாலையில் நடைபெறும், மகரஜோதி தரிசனத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மகரஜோதிக்கு பின்னரும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரலாம் என்பதால், அதற்கேற்ப அப்பம், அரவணை, பிரசாதம் தயாரிக்கவும், எருமேலி பேட்டை துள்ளலுக்கும், பந்தளம் திருவாபரணம் பவனிக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். எருமேலி பேட்டை துள்ளலுக்கு முன்னோடியாக, சந்தன குட பவனி இன்று இரவு எருமேலியில் நடக்கிறது.

Read Entire Article