செய்திகள் சில வரிகளில்...

2 years ago 598

நியூயார்க்கில் புதிய சட்டம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் நாட்டின் குடிமக்களாக இல்லாமல், வெளிநாடுகளைச் சேர்சந்த எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்க மாநகராட்சி தேர்தல்களில் குடிமக்களாக இல்லாதவர்களும் ஓட்டுபோட வழிவகுக்கும் சட்டத்திற்கு நகராட்சி கவுன்சில் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அதற்கு மேயர் எரிக் ஆடம்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த புதிய சட்டம், நேற்று அமலுக்கு வந்தது.

சிறைக் கலவரம்: 56 கைதிகள் காயம்

மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மான்டெர்ரே நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அபோடாகா சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில், 56 சிறைக் கைதிகள் காயமடைந்தனர். இதையடுத்து நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின், கைதிகளிடம் இருந்த மொபைல் போன்கள், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

லித்துவேனியாவுக்கு சீனா தடை

பீஜிங்: நம் அண்டை நாடான சீனா, தைவானை தொடர்ந்து உரிமைக்கொண்டாடி வருகிறது. தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதற்கிடையே ஐரோப்பிய நாடான லித்துவேனியாவில், தைவான் நாட்டு அரசின் பிரதிநிதி அலுவலகத்தை அமைக்க, அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீன அரசு, லித்துவேனியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நேற்று தடை விதித்தது.

பாறை விழுந்ததில் 6 பேர் பலி

பிரேசிலியா: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கேபிடோலியா நகரில் ஏரி ஒன்று உள்ளது. சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் இந்த ஏரிக்கு அருகே உள்ள மலையில் நேற்று முன்தினம் ராட்சத பாறை இடிந்து விழுந்தது. அப்போது ஆறு சுற்றுலா பயணியர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் காயமடைந்தனர். மேலும், 20 பேர் மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அமெரிக்க வீரர்களுக்கு கிடுக்கி

டோக்கியோ: கிழக்காசிய நாடான ஜப்பானில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திலிருந்து ராணுவ வீரர்கள் அங்கிருந்து வெளியே வருவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, ஜப்பான் மற்றும் அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆப்கனில் பேராசிரியர் கைது

காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான் அமைப்பினர்ஆட்சி அமைத்ததில் இருந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தலிபான்களை தொடர்ந்து விமர்சித்து வந்த பேராசிரியர் பைசுவாலா ஜலால் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதை உறுதிப்படுத்திய ஜலாலின் மகள் ஹசினா, தன் தந்தையை விடுவிக்க தலிபான் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

'ஒமைக்ரான்' அச்சுறுத்தலில் சீனா

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. அடுத்த மாதம் இங்கு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளதால் அதற்குள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தலைநகர் பீஜிங்கிற்கு அருகில் உள்ள தியன்ஜின் பகுதியில் இரண்டு பேர் 'ஒமைக்ரான்' வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Advertisement

Read Entire Article