அரும்பாக்கம் : எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.ஆனால், பள்ளி வளாகம் குறைந்தபட்ச பராமரிப்பு பணிகள் இல்லாமல், படுமோசமாக உள்ளது. பள்ளியின் மதில் சுவர் அமைந்துள்ள, 'பி' மற்றும 'ஒ - பிளாக்' சாலையில் முழுதும் ஆங்காங்கே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
குறிப்பாக, பி - பிளாக் பசும்பொன் தெரு பகுதியில் மதில் சுவர் அருகில், மாணவியரின் கழிப்பறை உள்ளது. அந்த கழிப்பறை அருகில் உள்ள சுவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் தற்காலிகமாக தகர தடுப்பு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தகர தடுப்பும் கீழே விழுந்துள்ளது.தக்க பாதுகாப்பில்லாத காரணத்தால், மாணவியர் கழிப்பறையை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
அத்துடன், அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிர்பலி சம்பவம் ஏற்பட்டது.அதேபோல் சம்பாவிதம் தொடராமல் இருக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement