சோராமல் அமைதி போரிடுவோம்... ஓயாமல் நம் பாதை தொடர்வோம்! தொற்றை விரட்ட வீட்டில் முடங்கிய மக்கள்

2 years ago 267

முழு ஊரடங்கு நாளான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் பெரும்பாலானோர், வீடுகளில் முடங்கினர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதற்கு திருப்பூர் மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தனர். பெரும்பாலானோர், வீடுகளிலேயே முடங்கினர்.மருந்துக்கடைகள், பால் பூத்கள் உள்ளிட்டவை தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால், பத்திரிகை, மருத்துவ வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

திருப்பூரில் முனிசிபல் ஆபீஸ் வீதி, மாநகராட்சி சந்திப்பு, புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், வாகனங்களில் வந்தவர்களை மறித்த, போக்குவரத்து போலீசார் 'எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக பயணிக்கிறீர்கள்?' என விசாரித்தனர். காரணத்தோடு வந்தவர்களை அனுமதித்து விட்டு, மற்றவர்களை ஓரமாக நிறுத்தி வைத்து, வாகன ஆவணங்களை பரிசோதித்து, பின் அனுப்பி வைத்தனர்.முழு ஊரடங்கு என்பதால், பஸ்கள் நேற்று அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து வெளியே வரவில்லை.
டிப்போ 1 மற்றும் டிப்போ 2 ல், 186 பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ரயில் விட்டு இறங்கியவர்கள் ஆட்டோ, டவுன் பஸ் இயக்கம் இல்லாததால், உறவினர், நண்பர்களை அழைத்து அவர்கள் மூலம் டூவீலரில் வீடு திரும்பினர்.நேற்று, ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர், நேற்று முன்தினம் இரவு முதல் பிளாட்பார்ம், வெளிவளாகங்களில் காத்திருந்தனர். உழவர் சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட், மீன்மார்க்கெட் போன்றவை மூடப்பட்டிருந்தன. புது மார்க்கெட் வீதி, அரிசிக்கடை வீதி, பெரியகடை வீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக, ஞாயிறன்று இறைச்சி விற்பனை களைகட்டும். நேற்று ஊரடங்கால், நேற்றுமுன்தினமே, இறைச்சி, மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். நேற்று இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பல்லடம்பல்லடத்தில், தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது. நால் ரோடு சிக்னல், பஸ் ஸ்டாண்ட், என்.ஜி.ஆர்., ரோடு, மங்கலம் ரோடு, திருப்பூர் ரோடு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்லடத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு முழுமையாக பின்பற்றப்பட்டது.
அவிநாசிஅவிநாசியில் எந்நேரமும் பிசியாக இருக்கும், சேவூர் ரோடு உட்பட பல்வேறு இடங்களும், கடைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என, பல்வேறு மாவட்டங்களின் சந்திப்பு பகுதியாக உள்ள அவிநாசி பஸ் ஸ்டாண்ட். எந்நேரமும் பிசியாகவே இருக்கும்.நேற்று, பொது முடக்கத்தால், ஆள் அரவமற்று இருந்தது. சேவூர், கருவலுார், தெக்கலுார் உள்ளிட்ட ஊரக பகுதிகளிலும், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.வெள்ளகோவில்வெள்ளகோவிலில் மருந்துக் கடைகள், பால் கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சில ஓட்டல்களில், உணவு பார்சலாக வழங்கப்பட்டது.
வாரச்சந்தை ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை காலை முதல் மாலை வரை வெறிச்சோடி காணப்பட்டது.காங்கயம், தாராபுரம், பொங்கலுார் உட்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.முழு ஊரடங்கான நேற்று, தொழிற்சாலைகள் விதிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. கையிருப்பு ஆர்டர்களுக்கு ஆடை தயாரித்து அனுப்பவேண்டிய கட்டாயம் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உள்ளது. அதனால், ஊரடங்கு நாளொன நேற்று, பல பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கின.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஞாயிறு முழு ஊரடங்கு நாளில், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்துள்ள அரசுக்கு நன்றி. அவசர கதியில் ஆடை தயாரிப்பை நிறைவு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், விதிமுறைகளை பின்பற்றி இன்று(நேற்று) இயங்கின.ஆர்டர் குறைந்த நிறுவனங்கள், வழக்கம்போல் ஞாயிறு விடுமுறையால், இயக்கத்தை நிறுத்தியுள்ளன.
நிறுவனங்களில், முக கவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் போன்ற தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு நாட்களில் தொழிலாளரை அழைத்துவருவதற்கும், பணி முடித்து வீட்டில் கொண்டுவிடுவதற்கு மட்டுமே நிறுவனங்கள் வாகனங்களை இயக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் குழு-

Read Entire Article