”தரமற்ற 10 ரூபாய் குளிர்பானங்களுக்கு அடிமையாகும் அபாயம்”- உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

3 years ago 389

Risk-of-becoming-addicted-to-substandard-10-rupee-soft-drinks--Tamilnadu-Food-Safety-Department-warning

உரிமம் இல்லாமல் கடைகளில் குளிர்பானங்கள் விற்கப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம், சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள கடையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளனர். குடித்து சில நிமிடங்களிலேயே இருவரும் மயக்கம் வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களின்மீது கெமிக்கல் வாசனை வரவே, பெற்றோர் அவர்கள் குடித்ததை வாந்தி எடுக்க வைத்துள்ளனர். பின் அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்றபின் இருவரும் தொடர்ந்து ரத்தவாந்தி எடுக்கவே, அவசர சிகிச்சை பிரிவில் அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

image

தொடர்புடைய செய்தி: குளிர்பானம் குடித்த சில மணி நேரத்தில திடீரென மயங்கி விழுந்த குழந்தைகள்... போலீசார் விசாரணை

பின் சிறுவர்களுக்கு சிகிச்சையளித்த ஸ்டான்லி மருத்துவர்கள் தரப்பிலிருந்து, குளிர்பானம் குடித்து சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்தது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அந்த கடையை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடையில் உள்ள பொருட்களில் என்னென்ன தரமற்றவை என்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

அந்தக் கடையில் தரமற்ற சில குளிர் பானங்களையும், உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தின் மாதிரிகளை எடுத்து சோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி உள்ளனர். அது மட்டுமல்லாது அந்த குளிர்பானத்தை விநியோகித்த திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோனிலும், அந்தக் குளிர்பானத்தை நாமக்கல் கிருஷ்ணகிரியில் தயாரிக்கும் நிறுவனத்திலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து குழந்தை எடுத்த ரத்தத்தின் மாதிரிகளை வேலூர் மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். ரத்தத்தில் என்ன மாதிரியான விஷம் கலந்து உள்ளது என ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்று இரவு சம்பந்தப்பட்ட கடையை அடைத்து இன்று காவல்துறை முன்னிலையில் கடையை திறந்து ஆய்வு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி ஆய்வு செய்யப்பட்டபோது கூல்டிரிங்ஸ், மாவு பாக்கெட் உள்ளிட்டவைகள் காலாவதியாகி இருந்தன.

image

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவிக்கையில், “தரத்தை ஆய்வு செய்து லேப்-க்கு அனுப்ப இருக்கிறோம். 2 சிறுவர்கள் குடித்த கூல்டிரிங்ஸ் பாட்டில் உற்பத்தி கிருஷ்ணகிரியில் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நாமக்கலை சேர்ந்தவர். கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூரில் அலமாதியில் இருக்கக்கூடிய குடோனிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10 ரூபாய்க்கு குளிர்பான பாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது. முறையாக உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெறாமல் விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக்கூறி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தடுக்கும் வண்ணம் சென்னை முழுவதும் உரிமம் இல்லாமல் விற்கப்படும் பத்து ரூபாய் குளிர்பானங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடையை மீறி விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் உரிமம் இல்லாமல் இது போன்ற குளிர்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ஏற்கெனவே தரமில்லாத பத்து ரூபாய் குளிர்பானங்களை குடித்து சிறுவர்கள் பாதிப்பு அடைந்து வரும் நிலையில், அந்த குளிர்பானங்களில் வலி நிவாரண மாத்திரைகளை கலந்து குடித்து போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வலி நிவாரண மாத்திரைகள் மட்டுமல்லாது சில வித போதை பொருட்களையும் இது போன்ற பத்து ரூபாய் குளிர்பானங்களில் கலந்து குடித்து சிறுவர்கள் போதைக்கு அடிமையாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

image

இதுபோன்று பத்துரூபாய் குளிர்பானங்களால் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை தடுக்க மருத்துவர்கள் பரிந்துரை இன்றி வலி நிவாரணிகள் போன்ற மாத்திரைகளை மருந்தகங்கள் கொடுக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே சிறுமி ஒருவர் இதே போன்ற குளிர்பானம் குடித்து உயிர் இழந்த நிலையில் தற்பொழுது மேலும் இரு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இந்த தரமற்ற பத்து ரூபாய் குளிர்பானங்களால் சிறுவர்களும் இளைஞர்களும் பாதிக்காமல் இருக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Read Entire Article