இந்தியாவில் பதிவாகும் கொரோனா தொற்று பாதிப்புகளில் பாதி கேரளாவில் பதிவாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை காலம் நெருங்குவதால், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 379 பேர் இறந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3.40 கோடியாக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 4.51 லட்சமாக உள்ளது.
மேலும், நேற்று 19,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.33 கோடியாக உள்ளது. நாட்டில் 2.03 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இதற்கிடையில், நேற்று ஒரே நாளில் 30.26 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 97.14 கோடியாக உள்ளது.
நாட்டில் பதிவாகும் ஒட்டுமொத்த கோவிட் பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கேரளாவில் பதிவாகி வருகிறது. இதன்மூலம் நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் மட்டும் 9,246 கொரோனா பாதிப்புகள் மற்றும் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.