புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி உள்ளிட்ட 10 பொருட்கள் கொண்ட தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
கொரோனா அச்சம் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி உள்ளிட்ட 10 பொருட்கள் கொண்ட தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த தொகுப்புகள் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தேசிய இளைஞர் திருவிழாவை, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காணொலி மூலம் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக ரங்கசாமி கூறினார். எனவே பிரதமரின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டு, காணொலி மூலம் பிரதமர் தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்க உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.