பெண் வேடம் போட்ட சீரியல் நடிகர் : வைரலாகும் புகைப்படங்கள்
16 அக், 2021 - 12:35 IST
சீரியலுக்காக பெண் வேடம் போட்ட நடிகரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் தொலைக்காட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. எனவே அதிக பட்ச சுவாரஸ்யத்துடன் திரைக்கதையை நகர்த்தி செல்ல சீரியல் இயக்குநர்களும் ஏதேதோ மேஜிக்குகளை லாஜிக்கை மறந்து செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் வானத்தை போல தொடர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக துளசியின் திருமணம் யாருடன் எப்படி நடக்கப்போகிறது என்பதை சில நாட்களாக பல ட்விஸ்டுகளுடன் ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாண்டியுடனான துளசியின் திருமணத்தை நிறுத்த வெற்றி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இறுதியில் அவர் பெண் வேடமிட்டு சில திட்டங்களை செய்து வருவதாக கதை நகர்கிறது. வெற்றி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வந்த் திலக் இந்த காட்சிகளுக்காக தன் மீசை எடுத்து பெண் போல் வேடமிட்டுள்ளார். பார்ப்பதற்கு அப்படியே பெண் போல் காட்சியளிக்கும் அஸ்வந்த் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் நின்று கொண்டு பெண் போல பாவனைகள் செய்து போட்டோ எடுத்துள்ளார். மேலும் பெண் போல் நடித்த ஷார்ட் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றன.
Advertisement