புதுடில்லி-கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணியர், மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு, அலுவலகம் வருவதில் இருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை நம் நாட்டில் தீவிரமாக உள்ளது. தினசரி பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. இத்துடன் 'ஒமைக்ரான்' வகை கொரோனாவும் வேகமாக பரவி வருகிறது. வார இறுதி நாட்கள்பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதால் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சார்பு செயலர் பதவிக்கு கீழுள்ள பதவிகளில் பணியாற்றும் ஊழியர்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.மீதமுள்ளவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.
எந்த நேரத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.வருகைப் பதிவேடுகர்ப்பிணியர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாடு பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றலாம்.
இவற்றின் அடிப்படையில் ஊழியர்களின் வருகைப் பதிவேடு தயார் செய்யப்படும். அலுவலகம் வருவோரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் இடையேயான சந்திப்புகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை முடிந்தவரை, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையிலேயே நடத்த வேண்டும். பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்க்கலாம்.அலுவலகங்களில் அதிக கூட்டம் சேருவதை தவிர்க்க மாறுபட்ட அலுவலக நேரங்களில் பணியாற்றலாம். இந்த உத்தரவு இம்மாதம் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
வைரஸ் பரவலைப் பொறுத்து, அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நீதிபதிகளுக்கு கொரோனாஉச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுபாஷ் ரெட்டி கடந்த வாரம் ஓய்வு பெற்றார். அவருக்கு நடந்த பிரிவுபசார நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நீதிபதிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.இந்த நிகழ்ச்சிக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. அவரைத் தொடர்ந்து மேலும் மூன்று நீதிபதிகளுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது
.பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா?
402 ஊழியர்களுக்கு பாதிப்பு!பார்லி.,யில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 402 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மொத்தமுள்ள 1,409 ஊழியர்களில், 402 பேருக்கு தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த 402 பேருக்கும் பார்லிமென்ட் வளாகத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது.
மற்ற இடங்களில் பரிசோதனை செய்து, தொற்று உறுதியானவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை.பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதியின் உரையுடன் கூட்டத் தொடர் துவங்க உள்ளது. இதையடுத்து பெண் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எம்.பி.,க்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின்போது, 30 பத்திரிகையாளர்கள் மட்டும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, பரிசோதனைகளுக்குப் பின் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.