தமிழ்நாடு
Published : 15,Oct 2021 07:21 AM
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 4 பேரை கொன்ற புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும், வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் தப்பியது.
கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் நான்கு நபர்களை கொன்ற புலியை பிடிக்கும் பணி 20 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்றிரவு மசினக்குடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதாகி நின்ற வாகனத்தை சரிசெய்து கொண்டிருந்த நபர்களை நோக்கி புலி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
இரவு 10 மணி அளவில் வனத்துறையின் மருத்துவக் குழுவினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஒரு ஊசி மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், புலி மயங்கி விழாமல் அடந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது. மசினகுடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகள் ஸ்ரீநிவாசன் மற்றும் உதயன் உதவியுடன் புலி பதுங்கிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரவு 2 மணி வரை தேடியும் புலியை கண்டுபிடிக்க இயலாததால், தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனிடையே புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்படி மாலை 6 மணிக்கு மேல் புலிக்கு மயக்க ஊசி செலுத்தக்கூடாது என்ற உத்தரவை மீறி, இரவு 10 மணிக்கு மயக்க ஊசி செலுத்தியது ஏன் என வன உயிரின ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved