'மருத்துவ வசதியின்மையும் முக்கியக் காரணி'- வட இந்தியாவில் காய்ச்சலுக்கு மடியும் குழந்தைகள்

3 years ago 285

Post-monsoon-fever-outbreak-kills-over-100-in-Indian-state

உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்களின் பெருக்கம் அதிகம் உள்ளதால், காய்ச்சல் வேகமாக பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு, வைரல் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டைபாய்டு மற்றும் மலேரியா பாதிப்பு குழந்தைகளுக்கு தற்போது அதிகம் உள்ளதாக இந்த மாநிலங்களில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. இதைத் தவிர அடையாளம் காணப்படாத மர்மக் காய்ச்சலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் பரவி உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

image

பாதிப்பு அனைத்து வயதுகளை சேர்ந்தவர்களுக்கும் இருந்தாலும், குழந்தைகளின் உயிரிழப்பு அதிகமாக உள்ளது கவலையை அளித்துள்ளது. வட மாநிலங்களை தவிர மேற்கு வங்கம் போன்ற நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுவரை குழந்தைகள் உயிரிழப்பு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அதிகமாக உள்ளதால் அந்த மாநிலங்கள் உடனடியாக அவசரகதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொசு ஒழிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசுக்களின் பரவலை கட்டுப்படுத்துவதால் மட்டுமே டெங்கு போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும் என மத்திய அரசு இந்த மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி: இந்தியாவில் வேகமெடுக்கும் டெங்கு பாதிப்பு: அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியல்…

அதேநேரத்தில் உடனடியாக குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகளை தேவையான அளவுக்கு இம்மாநிலங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் இதர தேவைகள் போதிய அளவுக்கு உள்ளதா என்பதையும் மத்திய அரசின் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரோசாபாத், ஆக்ரா, மதுரா மற்றும் கௌதம புத்தர் ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பகுதிகளில் போதிய மருத்துவ வசதிகளும் இல்லை என்பதால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. அதேபோல பீகார் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மற்றும் முசாபர்பூர் ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

டெல்லியிலும் காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் இதுவரை இதனால் குழந்தைகள் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் டெல்லியில் மருத்துவ வசதிகள் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைவிட மேலான நிலையில் இருப்பதே என கருதப்படுகிறது.

- கணபதி சுப்ரமணியம்

Read Entire Article