உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் மலேரியா பத்தாவது இடத்தில் உள்ளது. 2019ல் 22 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதில் 67 சதவீதம் பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இந்நிலையில் மலேரியா காய்ச்சலை தடுக்கும் 'மாஸ் குயிரிக்ஸ்' தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இது மலேரியாவை ஒழிப்பதற்கான நீண்ட கால போராட்டத்தில் மைல்கல்லாக அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மலேரியா பாதிப்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது ரோம பேரரசின் சரிவு, அமெரிக்க சுதந்திர போர், இரண்டாம் உலகப்போரின் போது இந்தோ - பசிபிக் போரில் வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை டாக்டர் ரொனால்டு ரோஸ் 1897 ஆக.20ல் கண்டுபிடித்தார்.
பொருளாதார வளர்ச்சி, நவீன சுகாதார கட்டமைப்பு, மருந்துகள் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் மேற்கத்திய நாடுகள் 1950களில் மலேரியா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தன. இருப்பினும் எதிர்காலத்தில் வராது என்பதற்கு உறுதியில்லை. ஆப்ரிக்கா, ஆசியாவில் மலேரியாவை ஒழிப்பதற்கு நீண்டகாலம் செல்ல வேண்டிஉள்ளது. ஆப்ரிக்காவில் தான் மலேரியா உயிரிழப்பில் 94 சதவீதம் பதிவாகிறது. காரணம் ஆப்ரிக்காவில் சுகாதார மேம்பாடு குறைவு, அதன் வெப்பநிலையும் மலேரியா கொசுக்களின் உற்பத்திக்கு சாதகமாக உள்ளது.
ஆப்ரிக்க இளைஞர்களுக்கு மலேரியா கொசுக்கள் பலமுறை கடித்திருப்பதால் அதற்கான குறுகிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். ஆனால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி இல்லை. இவர்களுக்கு இத்தடுப்பூசி மிகச்சிறந்த பலனளிக்கும் என அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பொது சுகாதார பேராசிரியர் பிரகாஷ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தீர்வாகுமா
இதுகுறித்து இவர் கூறியது: 'கொரோனா போல் அல்லாமல் மலேரியா தடுப்பூசிக்கான ஆய்வு 25 ஆண்டுகாலமாக பரிசோதனையில் உள்ளது. காரணம் மலேரியாவில் 5000 புரோட்டின் உள்ளது. கொரோனாவில் ஒரே ஒரு புரோட்டின் இருந்ததால் அதற்கு விரைவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
'ஆர்.டி.எஸ், எஸ்/ஏஎஸ்01' என்ற 'மாஸ்குயிரிக்ஸ்' தடுப்பூசியை பிரிட்டனின் ஜி.எஸ்.கே., நிறுவனம் 1987ல் உருவாக்கியது. செயல்திறன் குறைவாக இருந்ததால் அதை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்ததால் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது உலகில் பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு நீண்டகாலம் ஆகும். இத்தடுப்பூசியை பல்வேறு நாடுகளின் மருத்துவ நிபுணர்கள், மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அங்கீகரிக்க வேண்டும். மேலும் ஓராண்டுக்குள் 4 டோஸ் செலுத்த வேண்டும். இதுவும் சவாலானது.
மூன்று
மூன்று இலக்குகளை இது நிறைவு செய்தால் மலேரியாவை ஒழிப்பதில் உலகம் முன்னேறி செல்ல முடியும்.
* கொரோனாவுக்கு எதிரான பிரிட்டனின் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அனுமதி வாங்கி சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என தயாரிக்கிறது. அதுபோல பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுக்கு இதன் அனுமதி கிடைக்க வேண்டும்.
* அதே நேரத்தில் மலேரியா சிகிச்சைக்கான சுகாதார கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும்.
* மலேரியா ஆராய்ச்சிக்கான எதிர்கால நிதியை தடுப்பூசி காரணமாக உலக நாடுகள் நிறுத்தி விடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
11 நாடுகள்
தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒரு நாட்டில் மலேரியா பாதிப்பு பதிவாகாமல் கட்டுப்படுத்தி இருந்தால், அந்நாட்டை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கிறது. இதுவரை 11 நாடுகள் மட்டுமே இப்பட்டியலில் உள்ளன. 2019 கணக்கின்படி 27 நாடுகளில் 100க்கும் குறைவான பாதிப்பே பதிவாகியது. 2000ம் ஆண்டில் இது 6 நாடாக இருந்தது.
Advertisement