மழை பெய்தாலே மிதக்குது நகரம்...படகு, துடுப்பு கொடுங்க! கோடிகளில் ஒதுக்கிய நிதி என்னாச்சு

3 years ago 439

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு, கோவையில் வேலைகள் செய்கின்றனர். ஆனால், நகருக்குள் மழைநீர் வடிகால் உருப்படியாக இல்லாததால், 'சிட்டி'யே குளமாக மாறி, மக்களை அவதிக்குள்ளாக்குவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.
கடந்த, 2006-2011 தி.மு.க., ஆட்சியில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், ரூ.180 கோடியில், பழைய மாநகராட்சிப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன. அதில் எவ்வளவு கோடிக்குப் பணிகள் நடந்தன; எத்தனை கி.மீ., துாரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது என்றே தெரியவில்லை. ஆனால், நகரில் எந்தப் பகுதியிலும் மழை நீர் வடிகால் கண்ணில் தென்படுவதேயில்லை.
அடுத்து, 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்னும், மழை நீர் வடிகால்களை முழுமையாக அமைக்க முயற்சி எடுக்கவில்லை. 2014ல், மேயர் இடைத்தேர்தல் நடந்தபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா, கோவைக்கென, 2,378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார். அதில், மாநகராட்சி விரிவாக்கப்பகுதிகளில் 1,745 கி.மீ., துாரத்துக்கு, 1,550 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அப்போதும், மழைநீரை வடிகால் மூலமாக, குளங்களுக்கு கொண்டு செல்ல, எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இதனால், சிறுமழை பெய்தாலும் நகர சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. தற்போது பல்வேறு ரோடுகளில் பாலம் கட்டும் வேலை நடப்பதால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.
நேற்று மதியம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரமே வெள்ளக்காடாக மாறியது.அரசு மருத்துவமனைக்குள் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகிலுள்ள பாலங்களில் இருப்புப்பாதையை எட்டும் அளவுக்கு, சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி, தொட்டி போலாகியிருந்தது. லங்கா கார்னர் பாலத்தில் தேங்கிய தண்ணீர் வெளியேறவில்லை.
வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறியதால், போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்து நின்றன. ஆயுத பூஜை குப்பையும் அகற்றப்படாமல் இருந்ததால், வெள்ளத்தில் மிதந்து வந்து நகரை நாறடித்தன.எனவே, மழை நீர் வடிகால் போன்ற நகருக்கு மிகவும் அத்தியாவசியமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில், மழை பெய்யும்போதெல்லாம் மக்களின் வசைமாரியில் அரசு நனைவது நிச்சயம்!-நமது நிருபர்-

Advertisement

Read Entire Article