மாவட்டத்தில் ஊரடங்கால் பிரதான சாலைகள் வெறிச்... அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி

2 years ago 339

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த 6ம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலம் முழுவதும் ஞாயிற்று கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை 5:00 மணி முதல், இன்று அதிகாலை வரை ஊரடங்கு அமலில் இருந்தது. மாவட்டத்தில் 54 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார், ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலுார், பண்ருட்டி, வடலுார், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உட்பட பல இடங்களில் அத்தியாவசிய பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், ஏ.டி.எம்., மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல் பங்க்குகள், ரயில்கள் வழக்கம் போல் இயங்கின. மந்தாரக்குப்பம் கடைவீதியில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.மாவட்டத்தில் வீடுகளுக்கு நேரடி உணவு சப்ளை செய்யவும், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. உழவர் சந்தைகள், சினிமா தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்கள்,

வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. பொது மக்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டமின்றி பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நடப்பதால் கரும்பு ஏற்றி சென்ற மாட்டு வண்டிகள் டிராக்டர்கள் வழக்கம் போல் ஆலைக்கு சென்று வந்தன. பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், விசைப்படகுகள், பைபர் படகுகளை அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளத்தில் பாதுகாப்பாக நிறுத்தினர்.இதனால் கடலுார் மீன்பிடி துறைமுகம், பரங்கிப்பேட்டை மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மீன் அங்காடிகள் வெறிச்சோடியது. சிதம்பரத்தில் வண்டிகேட், கஞ்சித்தொட்டி மற்றும் முக்கிய வீதிகளின் சந்திப்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வெளியில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். வண்டிகேட்டில் தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வெளியில் வர கூடாது என கூறினர். அதற்கு நாங்கள் கட்சியினர் என கூறினர். இதற்கு தி.மு.க., அரசு தான் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீட்டிற்கு செல்லுங்கள் என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். சில இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலுாரில் செம்மண்டலம், மஞ்சக்குப்பம், டவுன்ஹால் உட்பட பல்வேறு இடங்களில் ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். ரூ.7.56 லட்சம் அபராதம் வசூல்மாவட்டத்தில் கடலுார்,

பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 7 காவல் உட்கோட்டங்கள் உள்ளது. சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய உட்கோட்டங்களின் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 7ம் தேதி முதல், நேற்று வரை முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளி பின்பற்றாதது உட்பட 3,711 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 7,56,300 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.முழு ஊரடங்கான நேற்று ஒரு நாள் மட்டும் முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 1,009 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Read Entire Article