ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் பெண்கள் கண்டிப்பாக தலையை மூடும் புர்கா அணிய வேண்டும் என்று தலிபான் அமைச்சகம் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
தலிபானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் ஆப்கானிஸ்தானின் காபூலைச் சுற்றி பெண்கள் தலையை மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என கட்டளையிடும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
கஃபேக்கள் மற்றும் கடைகளில் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவின் படத்தை சித்தரித்து ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்" என எழுதப்பட்டிருந்தது. இது ஷரியத் சட்டத்தை பின்பற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரங்களை அதிகளவில் குறைத்துள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு முன்பாக சாலையில் நீண்ட தூரம் செல்லும் பெண்கள் ஒரு ஆண் உறவினர் துணையுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், வாகனங்களில் இசையை ஒலிப்பதையும் தடை செய்து தலிபான்கள் உத்தரவிட்டனர்.