நடிகர் யஷ் பிறந்தநாளையொட்டி நாளை ‘கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
’தன்னைத்தானே செதுக்கியவன்’ என்ற வரிகள் தமிழ் சினிமாவில் எப்படி அஜித்துக்கு பொருந்துகிறதோ, அப்படியே கன்னட நடிகர் யஷ்ஷுக்கும் பொருந்தும். சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இன்று கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமது தென்னிந்திய ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்த நடிகராக உயர்ந்துள்ளார்.
‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டையொட்டி தேசிய விடுமுறை அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் யஷ் நாளை தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு பிறந்தநாள் அப்டேட்டை எதிர்பார்த்திருக்கும் நிலையில், நாளை 9 மணிக்கு ’கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.