மைசூரு:உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின், முக்கியமான நிகழ்ச்சியான விஜயதசமி ஜம்பு சவாரி ஊர்வலம் இன்று மாலைகோலாகலமாக நடக்கிறது.
மைசூரை ஆண்ட உடையார் மன்னர் வம்சத்தினர், 1610 முதல் மைசூரு தசரா விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், 2021ம் ஆண்டின் விழாவை, மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த 7ல் துவக்கி வைத்தார்.அன்று முதல், நேற்று வரை அரண்மனை வளாகத்தில் பல கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. எனினும், கொரோனா கெடுபிடிகள் அமலில் உள்ளதால், எளிமையாக நடத்தப்பட்டன.
மன்னர் வம்சத்தை சேர்ந்த யதுவீர், அரச உடை அணிந்து வந்து, பட்டத்து யானை, குதிரைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கார்கள், பைக்குகள், துப்பாக்கிகள், ஆயுதங்களுக்கு அரண்மனை வளாகத்தில் ஆயுத பூஜை செய்தார்.
இதை, மன்னர் வம்சத்தின் தலைவர் பிரமோதா தேவி, யதுவீரின் மனைவி திரிஷிகா தேவி, மகன் ஆத்யவீர் ஆகியோர் அரண்மனையிலிருந்து பார்த்து ரசித்தனர். அப்போது, மரியாதை செலுத்தும் வகையில் போலீஸ் பேண்ட் இசைக்கப்பட்டது.இந்நிலையில், தசரா விழாவின் முக்கியமான நாளாக கருதப்படும் விஜயதசமியை ஒட்டி, உலக பிரசித்தி பெற்ற ஜம்பு சவாரி ஊர்வலம் இன்று நடக்கிறது.
சாமுண்டி மலையிலிருந்து, தங்க சாமுண்டீஸ்வரி தேவி உற்சவர் சிலை, இன்று காலை ஊர்வலமாக அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையில், அரச முறைப்படி வன்னி மரத்துக்கு யதுவீர் பூஜை செய்வார்.அதன் பின், அரண்மனையின் பலராமா நுழைவு வாயிலில், இன்று மாலை 4:36 மணியிலிருந்து, 4:46 மணிக்குள் நந்தி கொடிக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பூஜை செய்து, மன்னர் வம்சத்தினரை ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும்படி மாநில அரசு சார்பில் அழைப்பு விடுப்பார்
.பின், மாலை 5:00 மணியிலிருந்து, 5:30 மணிக்குள், தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, பசவராஜ் பொம்மை, விஜயதசமி ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைப்பார்.கொரோனாவால் எளிமையாக நடப்பதாக இருந்தாலும், பாரம்பரியம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இம்முறை ஊர்வலத்தில் அபிமன்யூ யானை தங்க அம்பாரியை சுமக்கும். அந்த யானைக்கு துணையாக, கும்கி யானைகள் காவிரி, சைத்ராவும், வழிகாட்டியாக தனஞ்சயா, கோபாலசுவாமி ஆகிய ஐந்து மானைகள் மட்டுமே பங்கேற்கவுள்ளன. குவிந்த சுற்றுலா பயணியர்விழா நடக்கும் பகுதி யில் பிரமாண்டமான 'ஷாமியானா' போடப்பட்டுள்ளது.
வி.வி.ஐ.பி.,க்கள், வி.ஐ.பி.,க்கள், மன்னர் வம்சத்தினர், ஊடகத்தினருக்கு சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் தனி தனியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன.பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், வெவ்வேறு பகுதி களிலிருந்து சுற்றுலா பயணியர் மைசூரில் குவிந்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்பு சவாரி ஊர்வலத்தை ஒட்டி, துணை ராணுவத்தினர், அதிரடி படையினர் மைசூரு நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.