புதுடில்லி:வெறுப்புணர்வை துாண்டும் பேச்சு மற்றும் வதந்தி பரப்புவதை கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதன் விபரம்:வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுக்கள் மற்றும் வதந்தி பரப்புவதால் சாதாரண பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். கலவரங்கள் ஏற்பட்டு உயிர்களும் பலியாகின்றன. வதந்தி பரப்புவது மற்றும் வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சர்வதேச சட்டங்களை ஆராய்ந்து பயனுள்ள மற்றும் கடுமையான முறையில் இதை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பொது அமைதியை குலைப்பது, தேர்தல் கலவரங்கள் போன்ற வழக்குகளில் ஒரே நேரத்தில் தண்டனையை அறிவிக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு தசரா விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
Advertisement