மும்பை:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, ‘டாடா சன்ஸ்’ வாங்குவது தொடர்பாக, ரத்தன் டாடாவின் ஆலோசனையை குழுமம் நாடியதாக கூறப்படுகிறது. அவருடைய ஆலோசனையையும் பெற்றே, ஏர் இந்தியாவை வாங்க விண்ணப்பிக்கும் முடிவுக்கு குழுமம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டாடா சன்ஸ் எடுத்த இந்த முடிவு முற்றிலும் குழுத் தலைவர் என்.சந்திரசேகரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும் என, டாடா அறக்கட்டளையின் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து முடிவு செய்ய சந்திரசேகரன் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும்; அந்த குழுவின் ஆய்வின் அடிப்படையிலேயே, ஏர் இந்தியாவை வாங்குவது என முடிவு எடுக்கப்பட்டது என்றும் டாடா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:எனக்கு விமான போக்குவரத்து மீது ஆர்வம் உள்ளது. பல்வேறு விமானங்களில் டைப் ரேட் பைலட்டாக இருந்துள்ளேன்.இருப்பினும், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுக்கும் முடிவில் நான் ஈடுபட வில்லை. ஆனால் அந்நிறுவனத்தை ஏற்று, அதை நிலைநிறுத்துவது குறித்த பாசிட்டிவ்வான உணர்வை வெளிப்படுத்தினேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.